பேரறிஞர் அண்ணாவின் 40வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.
அ.இ.அ.தி.மு.க சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் அதன் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக் கழக தலைவர் ஜெகத்ரட்சகன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ தலைமையில் இன்று மாலை 4.30 மணியளவில் சிம்சன் எதிரில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தின் முடிவில் வைகோவும், ம.தி.மு.க நிர்வாகிகளும் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.