ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து அம்பத்தூரில் நேற்றிரவு நடந்த கூட்டத்தின் மேடை சரிந்து விழுந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காயம் அடைந்தார்.
அம்பத்தூர் பா.ம.க. சார்பில் ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து அம்பத்தூரில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பேசிய பின் கடைசியாக பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் பேசினார்.
அவர் பேசி முடித்ததும், வேறு கட்சிகளில் இருந்து விலகி, ராமதாஸ் முன்னிலையில் இணைவதற்காக மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளில் இருந்து வந்திருந்த 250 இளைஞர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
ஏற்கனவே இருந்த கட்சிகளின் அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு டாக்டர் ராமதாசிடம் இருந்து பா.ம.க. அடையாள அட்டையை பெறுவதற்காக அவர்கள் மேடைக்கு வந்தனர்.
அப்போது, அத்தனை பேரும் முண்டியடித்து கொண்டு ஒரே நேரத்தில் மேடையில் ஏற முயற்சித்தனர். ஏற்கனவே ராமதாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் அந்த மேடையில் இருந்தனர்.
இந்த நிலையில், கட்சியில் இணைய வந்திருந்த அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு மேடையின் மீது ஏறியதால் பாரம் தாங்காமல் மேடை சரிந்து கீழே விழுந்தது. இதனால் மேடையில் இருந்தவர்களும், மேடையில் ஏறியவர்களும் கீழே விழுந்தனர். டாக்டர் ராமதாசும், மேடையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. எனினும் அவர் உடனடியாக எழுந்து விட்டார். உடனே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ராமதாசை கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.