சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத் துறை நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் நேற்றிரவு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு அறநிலையத்துறை துணை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் திருமகள் ஆகியோர் பொறுப்புகளை அளித்து உத்தரவிட்டனர்.
கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம், வட்டாட்சியர் கோ.தன்வந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த உத்தரவை தீட்சிதர்கள் பெற மறுத்தனர். அப்போது, '1987ஆம் ஆண்டு போட்ட உத்தரவு இது. இதற்கான நகலை தர வேண்டும் அல்லது தற்போது உயர் நீதிமன்ற தள்ளுபடி ஆணை உத்தரவு வேண்டும்' என தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் தீட்சிதர்கள் கேள்வி எழுப்பினர்.
1987ஆம் ஆண்டு உத்தரவுக்கான தடை தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இந்த உத்தரவுக்கு அதிகாரம் உண்டு என அதிகாரிகள் பதில் தெரிவித்தனர்.
பின்னர் நீதிமன்ற தடை உத்தரவு தள்ளுபடி ஆணையின்றி அறநிலையத்துறை உத்தரவை பெற்று கொள்வதாக கூறி தீட்சிதர் தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார், நிர்வாக அதிகாரி நியமன உத்தரவை பெற்று கொண்டார்.