இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கக் கோரி வரும் 4ஆம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படுவதை போல் புதுச்சேரியிலும் அதே நாளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க கோரியும், போர்நிறுத்தம் கோரியும் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் வருகிற 4ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் பொது வேலை நிறுத்தம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பா.ம.க., ம.திமு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழகத்தைப்போல புதுச்சேரியிலும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பு செயலர் பாவணன் செயல்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தொழிலாளர்கள் சுய வேலை மறுப்பு போராட்டத்திலும், கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்திலும், மீனவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இலங்கைத் தமிழர்களை காத்திட முன்வரவேண்டும் என்றும் வருகிற 7ஆம் தேதி கறுப்புக்கொடி ஊர்வலம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.