சென்னை : ''எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தாலும் எனது அண்ணன் தமிழர்களுக்காக உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன்'' என்று முத்துக்குமாரின் தங்கை தமிழரசி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் மக்காராம் தோட்டம் என்ற இடத்தில் வசித்து வருபவர் தமிழரசி (24). இவர் தனது கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களுடன்தான், ஈழத் தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் வசித்து வந்தார். அவர் ஏழ்மையின் காரணமாக சிறிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தனது அண்ணன் மறைவை நினைத்து தாங்க முடியாமல் அழுது புலம்பினார்.
கண்ணீர் மல்க அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொழுவநல்லூர் என்ற கிராமம். அங்கிருந்து 10 வருடங்களுக்கு முன்பு பிழைப்புத்தேடி சென்னை வந்தோம். எனது தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அதில் உள்ள வருமானத்தை வைத்துத்தான் குடும்பம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், எனது தாயார் உடல்நலமின்றி இறந்துவிட்டார். அதுமட்டுமல்ல எனது மற்றொரு சகோதரர் வசந்தகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் விபத்தில் இறந்துவிட்டார். தாயையும் இழந்து சகோதரரையும் இழந்து நாங்கள் வாடிக்கொண்டிருந்தோம். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. என்னுடன்தான் எனது அண்ணன் முத்துக்குமார் தங்கியிருந்தான். சினிமா இயக்குநராக வேண்டும் என்று விரும்பினான். உதவி இயக்குனராகவும் ஒரு நாடகத்திற்கு பணியாற்றினான்.
அதன்பிறகு, ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தான். காலையில் சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவான். எல்லோரிடமும் அன்பாக இருப்பான். எனக்கு அம்மா இல்லாத குறையை எனது அண்ணன்தான் போக்கினான்.
சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 5 மணிக்கே எழுந்துசென்று விட்டான். மதியம்தான் எனது அண்ணனின் படம் கேட்டு ஒருவர் வந்தார். அதன்பிறகுதான் அவன் தீக்குளித்த விடயம் தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கை கால் நடுங்கியது. அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன். எப்படியும் பிழைத்துக்கொள்வான் என்று நினைத்தேன். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவன் இறந்த செய்தி கேட்டு துடித்தேன். அவன் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்றே தான் பேசிக்கொண்டிருப்பான். அவன் சிந்தனை கடல் போல பெரியது. எதையுமே சிறிய கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான். அவனை இழந்தது எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தாலும் தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்ததை நினைத்து சற்று ஆறுதல் அடைகிறேன் என்று தமிழரசி கூறினார்.