''பணம், பொருள் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம்'' என்று தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சத்தை வாங்க மாட்டோம் என்று இறந்த முத்துக்குமாரின் தங்கை கணவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார்.
ஆனால், இந்த நிதி உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் கற்குவேல் ஏற்க மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை எங்களுக்கு வேண்டாம். தமிழ் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தான் முத்துக்குமார் உயிரை விட்டார். அதற்காக எங்களுடைய குடும்பம் சந்தோஷம் அடைகிறது.
பணம், பொருள் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தனி நபருடைய உணர்வு தான் இது, அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. தீக்கிரையாகியதை தொடர்ந்து இப்போது வரை பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளை தெரிவித்தனர்.
நாங்கள் அறிவித்த இறுதி சடங்கு நாளை (இன்று) ஒத்தி வைக்கப்படுகிறது. நாளை தமிழ் உணர்வாளர்களும் நெருங்கிய உறவினர்களும் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.