இலங்கை பிரச்சனைக்காக போராட்டம் நடத்த வரமறுத்த வழக்கறிஞர்களும், போராட்டக் குழுவினரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையிலேயே மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து விட்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக் குழு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமாக சென்று வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர்.
நீதிபதி ரவிராஜா பாண்டியன் முன்னிலையில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அங்கு சென்று போராட்ட குழு வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது தி.மு.க. வழக்கறிஞர் வணக்கம் ரவி போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் வழக்கறிஞர்கள் தி.மு.க. வழக்கறிஞர்களை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் தலைமை நீதிபதி முகோபாத்யாயா இருக்கும் அறைக்கு கோஷம் எழுப்பியபடி சென்ற வழக்கறிஞர்கள், அங்கிருந்த வழக்கறிஞர்களை வெளியே வரும்படி அழைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் செல்லையா அறைக்குள்ளே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்ட வழக்கறிஞர்கள், செல்லையாவை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே தலைமை நீதிபதி முகோபாத்யாயா, நீதிமன்ற பதிவாளர் மாலா ஆகியோர் வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தி வெளியேற்றினர். அதன்பின் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாநகர பேருந்தை வழக்கறிஞர்கள் சிறை பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கை பிரச்சனைக்காக உயிர் நீத்த முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள கொளத்தூருக்கு செல்லும் மாறு பேருந்து ஓட்டுனரிடம் கூறினர். அவர் மறுத்துவிட்டதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் பேருந்தில் இருந்து இறங்க மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
வழக்கறிஞர்கள் இடையே மோதல், சாலை மறியல் ஆகியவற்றால் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் இன்று பெரும் பரபரப்பாக காணப்பட்டது.