சென்னையில் உள்ள இலங்கை வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமரன் என்ற இளைஞர் உயிர் தியாகம் செய்து கொண்டதின் எதிரொலியாக சென்னை வேப்பேரி ஈ.வே.ரா நெடுஞ்சாலையில் உள்ள இலங்கை வங்கியின் மீதும், கார்கள் மீதும் நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக வங்கி மனேஜர் ராஜேந்திரன் வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, வங்கியில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அமர்நாத், கேசவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.