Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈழத் தமிழர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள் : சரத்குமார்

Advertiesment
ஈழத் தமிழர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள் : சரத்குமார்
இலங்கை பிரச்சனையில் உடனடி முடிவு எடுக்காவிட்டால் ஈழததமிழர்கள் நம்மை மன்னிக்கமாட்டார்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையை கையாள்வதில் மாநில அரசும், மத்திய அரசும் நிலைமையை உணராமல் காலம் கடத்தி வருகின்றன. ஏதோ நாடகம் அரங்கேறி வருகிறது என்றுகூட சொல்லலாம். அதன் உச்சகட்ட காட்சிதான் இந்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியின் தற்போதைய இலங்கை பயணம். அவரது பயணம் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அதிபருடன் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.

காஸா பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்கிற அக்கறை இல்லாதது வேதனையளிப்பதாக இருக்கிறது. போர் நடைபெற்று வரும் இலங்கையின் வடக்கு பகுதிக்கு தமிழக தலைவர்கள், குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியும், எதிர்‌க்கட்சி தலைவர் ஜெயலலிதாவும் நேரில் வந்து பார்வையிடலாம் என்று இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருப்பது, இந்த இருவருமே வரமாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையில் கூறியதாக எடுத்துக்கொள்ளலாம்.

விசாரணைக்காக பிடித்துச் செல்லப்படும் தமிழ்பெண்களை காவல் முகாம்களில் அடைத்து வைத்து இலங்கை ராணுவத்தினர் கற்பழிப்பது, ஆண்களை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்துவது என்ற செய்திகள் வெளிவந்திருப்பது இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய செயல்களை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கை தமிழர்களின் இப்படிப்பட்ட அவல நிலைக்காக மனமுடைந்து தமிழ் உணர்வுமிக்க முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து தன் இன்னுயிர் மாய்த்திருப்பது, இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மத்திய, மாநில அரசுகளின் இயலாமை தந்திருக்கும் ஏமாற்றத்தின் விளைவே என்பதை இரு அரசுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வினாடியும் நம் தொப்புள் கொடி உறவுகள் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து உடனடியாக முடிவெடுக்காவிட்டால் ஈழத்தமிழர்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முத்துக்குமார் இன்று தொடங்கி வைத்த தீக்குளிப்பு யாகம் இனியும் தமிழகத்தில் தொடர்கதை ஆகிவிடக் கூடாது என்பதை அவசியம் இரு அரசுகளும் உணர்ந்தாக வேண்டும்.

தன் இனத்தை சேர்ந்தவர்கள் அழிந்து வருவது கண்டு தன்னுயிர் இழந்து முத்துக்குமார் குடும்பத்தினருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil