இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று மாலை காந்தி சிலை முன்பு நடத்தும் மவுன விரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக 30ஆம் தேதி (இன்று) மாலை 4 மணி அளவில் சென்னை காமராஜர் சாலை, காந்தி சிலைக்கு முன்னால் மவுன விரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு உள்ளார்கள்.
இத்தகைய போராட்டங்களை நடத்துவதற்காக அனுமதிக்கப்படுகின்ற இடங்களில் ஒன்றாக காந்தி சிலைக்கு அருகில் உள்ள இடம் இல்லை என்பதாலும், 30ஆம் தேதி காந்தி மறைந்த நாள் என்பதாலும், இந்தப் போராட்டத்தை வேறொரு அனுமதிக்கப்பட்ட இடத்தில் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்களிடமிருந்து முறைப்படி அனுமதிக்கப்பட்ட இடம் கோரி விண்ணப்பிக்கப்படுமானால், இந்த மவுன விரதப் போராட்டம் நடத்திட காவல்துறை அனுமதிக்கும். காவல்துறை ஆணையை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.