சென்னையில் சிறிலங்க அரசிற்கு சொந்தமான சிலோன் வங்கி மீதும், வங்கி அலுவலர்களின் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொல்லப்படும் அப்பாவித் தமிழ் மக்களைக் காக்க வலியுறுத்தி இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் என்ற பத்திரிக்கையாளர் தீக்குளித்து இறந்தார்.
இந்நிலையில், இன்று மாலை பூந்தமல்லி சாலையில் வேப்பேரி என்ற இடத்தில் தனியார் கட்டடத்தில் இயங்கும், சிறிலங்க அரசிற்குச் சொந்தமான சிலோன் வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் வங்கியின் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் உடைந்து நொறுங்கின. வங்கி அலுவலர்களின் கார் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடைந்தன. இதனால் பதற்றமடைந்த வங்கி ஊழியர்கள் அலறியபடி வெளியேறினர்.
மாநகரப் பேருந்தில் வந்த 50க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் வங்கியின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் அனைவரும் வழக்கறிஞர்கள் போல தோற்றமளித்ததாகவும் வங்கியின் காவலாளி தெரிவித்தார்.
பாதுகாப்பிற்காக 4 காவலர்கள் வங்கியின் முன்பு இருந்தபோதும், தாக்குதல் நடத்திய கும்பலில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததால் அவர்களைத் தடுக்க முடியவில்லை எனத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து சென்னை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விசாரணை நடத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறிலங்கத் தூதரகம் மற்றும் சிறிலங்க அரசிற்குச் சொந்தமான அலுவலகங்கள் முன்பு கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.