தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலர் தாமோதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மற்றும் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று இன்று காலை சத்தியமூர்த்தி பவன் தொலை நகலுக்கு (பேக்ஸ்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில் "ஜனவரி 26 முடிந்து விட்டது. இலங்கையில் போரை நிறுத்த மத்திய அமைச்சர் போய் விட்டார். மிக்க சந்தோசம். போர் நிற்காவிட்டால், தங்கபாலு, கார்வேந்தன், இளங்கோவன், ஞானசேகரன் நால்வரில் ஒருவர் பலி, மத்திய அரசு புரிந்து கொள். எங்கள் இயக்கம் முடியும்போது இனி கடிதம் இல்லை, செயல் தான்'' என்று கம்ப்யூட்டரில் டைப் செய்து அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதம் எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் எதுவும் அக்கடிதத்தில் காண முடியவில்லை. இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி சென்னை அடையாரில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வீட்டுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.