இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசை கண்டித்தும், இலங்கையில் போரை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று மாணவர்கள் உண்ணாவிரதம், சாலை மறியல் ஆகிய போராட்டங்களை நடத்தினர்.
கடந்த 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு பச்சை துரோகம் செய்து வருகிறது என்றும் இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு இலங்கையில் தமிழர்களை அழித்து வருகிறது என்றும் குற்றம்சாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகம் முன்பு தமிழக பெண்கள் முன்னணி அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே இன்று காலை உண்ணாவிரதம் நடந்தது. இந்த உண்ணாவிரதத்துக்கு மாணவர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். கோவை வழக்கறிஞர்களும் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக நடந்து வருகிறது. இதில் பல மாணவர்கள் சேர்வாக காணப்பட்டனர். பந்தல் அருகிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ குழுவினரும் அருகில் உள்ளனர்.
திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும், சிங்கள அரசுக்கு உதவி செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர் நகராட்சி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.