தமிழகத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 1ஆம் தேதி நடக்கிறது. ஏற்கனவே கொடுத்திருந்தாலும், முதல் கட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மாதம் நடந்த முதல் சுற்று போலியோ சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்து கட்டுமானம் மற்றும் சாலை அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பத்தில் உள்ள 19 ஆயிரம் குழந்தைகளுக்கு முதல் சுற்று முகாமின்போது சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
முதல் சுற்று முகாமின்போது சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும், பிப்ரவரி 1ஆம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட முகாமில் சொட்டு மருந்து கொடுக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்ற முகாமின்போது ஏதோ காரணங்களுக்காக விடுபட்டுப்போன குழந்தைகளுக்கும், புதிதாக பிறந்துள்ள குழந்தைகளுக்கும் இந்த சுற்றின்போது சொட்டு மருந்து வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த குழந்தையும் போலியோவினால் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், வருமுன் காக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் கூடுதலாக போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோய் ஊடுருவுவதை தடுத்துவிட முடியும். முக்கியமாக, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
இந்த சொட்டு மருந்து கொடுப்பதால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டுமருந்து கொடுத்திருந்தாலும் கூட, மீண்டும் இந்த மருந்தை குழந்தைகளுக்கு போடவேண்டும். புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கும் மருந்து போடவேண்டும்.
இதற்காக, தமிழகம் முழுவதும் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா மையங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.