இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்திலும் சில இடங்களில் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் உள்ள அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 10,000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் 2,000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள ஊரீசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலைக்கு சென்று இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது சில மாணவர்கள் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து நெல்லை சென்று கொண்டு இருந்த பாசஞ்சர் ரயிலை மறித்த கும்பகோணம் வழக்கறிஞர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சில மாணவர்கள் போது ராஜபக்சேவின் உருவபொம்மையை எரிப்பதற்காக எடுத்து வந்தனர். காவல்துறையினர் அந்த உருவபொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.
திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 28ஆம் தேதி (நேற்று) முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் சட்டக்கல்லூரிக்கு நேற்று திடீரென விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வெளியிட்டு இருந்தார்.