இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
சென்னை அருகே நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சென்னைக்கு சுமார் 120 கடல் மைல் தொலைவில் கிருஷ்ணாபட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில் இலங்கை மீன்பிடி படகு ஒன்று தென்பட்டதை கடலோர காவல் படையினர் பார்த்தனர்.
உடனடியாக அவர்கள் அந்த படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 7 இலங்கை மீனவர்களையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் தனுஷ்கா (23), பிரசாத் (23), சமதா சனத் ( 26), கசும்தாரகே (23), பாலிதா (53), தில்குத் சனத் (23), சுமித்திர சாரா (27) என்றும் இலங்கையின் கிழக்குப் பகுதியான திரிகோணமலையை அடுத்த டிசில்லா என்ற இடத்தில் இருந்து கடந்த 1ஆம் தேதி அவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், 7 பேரையும் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.