இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியனும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் சந்தித்து விவாதித்தனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் இன்று மாலை 6.15 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு 6.45 மணி வரை நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,
இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தாங்க முடியாத துக்கச் செய்தியாக உள்ளது. நேற்றும் இன்றும் வரும் செய்திகளை பொறுமையாகக் கேட்க முடியவில்லை. அதனால், ஏதாவது செய்ய வேண்டும், அமைதியாக இருக்க முடியாது என்பதால் ஒத்த கருத்துள்ள தலைவர்களைச் சந்தித்து என்ன செய்யலாம்? என ஆலோசிக்க முடிவு செய்தோம்.
இன்று மருத்துவர் இராமதாசை சந்தித்து ஆலோசித்தேன். அவரும் ஆழ்ந்த வேதனையில்தான் இருக்கிறார். ஒத்த கருத்துடைய தலைவர்களின் கூட்டம் நாளை சென்னையில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ஆறரைக் கோடி தமிழ் மக்களின் ஒருமித்த முடிவாக இருக்கும் என்றார்.