இலங்கையில் அப்பாவித் தமிழர்களை அந்நாட்டு இராணுவத்தினர் படுகொலை செய்வதைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் சென்னை தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை தலைமைச் முன்பு இன்று காலை கூடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டம் செய்ததுடன், சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.