இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிதி பற்றி அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிடும் அறிக்கைகள் குறித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.தி.மு.க.வினர் சட்டப்பேரவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரண்டாவது நாளாக இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பேசிய அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் அக்ரி.கிருஷ்ண மூர்த்தி, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அனைத்துக் கட்சி கூட்டம், மனித சங்கிலி, தந்தி அனுப்புதல், உண்ணாவிரதம் என்று கண்துடைப்பு நாடகங்களைத்தான் தமிழக அரசு நடத்தி வருகிறது என்றும் குற்றம்சாற்றினார்.
மேலும் இலங்கை தமிழர் நிவாரணத்திற்காக திரட்டப்பட்ட நிதி சரியாக கையாளப்பட்டதாக தெரியவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "யார் யாரிடம் எவ்வளவு நிதி வசூல் செய்யப்பட்டது, அந்த நிதி எப்படி செலவிடப்பட்டது என்ற விவரங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வந்தன. எனவே உறுப்பினர் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது'' என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "நிதி வசூலிப்பது என்பது ஒரு அரசின் தனிப்பட்ட சொத்து அல்ல, காசோலைகள் மூலமாகத்தான் நிதி வசூல் செய்யப்பட்டது என்றும் அவை தலைமைச் செயலர் மூலம் கணக்கு வைக்கப்பட்டு அரசு கணக்கில் உள்ளது. வேண்டுமானால் அவரிடம் இருந்து இந்த கணக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
''பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஒருவர் இந்த நிதியை முதலமைச்சரின் குடும்பத்தார் பங்கு போட்டுக் கொண்டதாக பொறுப்பில்லாமல் அறிக்கை விடுகிறார். அவர்தான் பொறுப்பில்லாமல் அறிக்கை விடுகிறார் என்றால் உறுப்பினராவது பொறுப்போடு பேசவேண்டும்'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள், அமைச்சரின் வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த அவைத் துணை தலைவர் துரைசாமி, "ஒரு நல்ல நோக்கத்திற்காக வசூலிக்கப்பட்ட நிதியை கொச்சைப்படுத்தக் கூடாது' என்று கேட்டுக் கொண்டார்.
உடனே எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, "எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்ற செயல் என்று மின்துறை அமைச்சர் கூறியதை திரும்ப பெற வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் அன்பழகன், ''வெளியில் இருந்து அறிக்கை விட்டாலும், பேசினாலும் அதுபற்றி சட்டப்பேரவையில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. பொறுப்பற்ற முறையில் விடும் அறிக்கைகளை இங்கு மறுத்துக் கூறலாம்' என்றார்.
இதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள், அமைச்சர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வேண்டுமென்று கோஷம் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சரின் குடும்பத்தார் நிதியை சுருட்டிக் கொண்டதாக முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதால்தான் அதற்கு நான் பதில் சொல்ல நேர்ந்தது. இதனை நீதிமன்றத்திலும் சந்திக்க தயார்' என்றார்.
இதனைக் கண்டித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.