தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் ஒப்புதல் பெறாமல் மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர தலைவர்களை நியமிக்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது என்று மாவட்ட தலைவர்களுக்கு மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சில மாவட்டத் தலைவர்கள் தன்னிச்சையாக மாவட்ட, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம், மாற்றங்கள் செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் பெறாமல் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகளை நியமனம் செய்வது கட்சி விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ள தங்கபாலு, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்டத்திற்குள் பதவி நியமனம், மாற்றங்கள் குறித்து பரிந்துரைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட நியமனம், மாற்றங்கள் செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.