''
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அடுத்த 6 மாதத்தில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்'' என்று மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று நடைபெற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை- தடா இடையே அமைக்கப்படவுள்ள 6 வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 9,250 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் இதுவரை சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.32,821 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்த டி.ஆர்.பாலு, தமிழகத்தில் உள்ள துறைமுக வளர்ச்சி பணிகள் ரூ.21,215 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன என்றும் இந்த பணிகள் நிறைவடைவதன் மூலம் தமிழகத்திற்கு பொருளாதார மேம்பாடு மூலம் ரூ.2 லட்சம் கோடி கிடைக்கும் என்றார்.
தமிழகத்தில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைவதை, இடதுசாரி தலைவர்கள் தடுத்து வந்தனர் என்று குற்றம்சாற்றிய அவர், அதனால் ஏற்பட்ட காலதாமதத்தால் தான் தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சேது சமுத்திர திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டது என்று தெரிவித்த அமைச்சர் டி.ஆர்.பாலு, சர்ச்சைக்குரிய 22 கி.மீ தூரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் பணிகள் தற்போது தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகு, அடுத்த 6 மாத காலத்திற்குள் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.