பண்ணாரி வனக்குட்டைக்கு வரும் யானைகள்: காத்திருந்து கண்டு ரசிக்கும் மக்கள்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் உள்ள வனக்குட்டையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்வதை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. வனப்பகுதியில் உள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டு பின் வனப்பகுதியில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு வாழ்ந்த வருகிறது.
தற்போது வனப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் இந்த வனப்பகுதி வறண்டு போயுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை போக்க வனத்துறையினர் பண்ணாரி செல்லும் வழியில் உள்ள வனக்குட்டையில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளனர்.
இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் நாள்தோறும் இந்த குட்டைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக மாறிவிட்டது. நாள்தோறும் மாலை நான்கு மணிக்கு மேல் இந்த காட்டுயானைகள் கூட்டமாக வந்து செல்கிறது.
இந்த யானை கூட்டத்தை பார்க்க வனக்குட்டையின் முன் நாள்தோறும் மாலை நான்கு மணிக்கு மக்கள் ஆஜராகி விடுகின்றனர். யானைகளை பார்த்த பின்னனே இவர்கள் செல்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நின்று தண்ணீர் குடிக்கும் யானைகளை பார்த்து பரவசமடைந்து சத்தமிடுவதால் யானைகள் முழுமையாக தண்ணீர் குடிக்க முடியாமல் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. சில சமயங்களில் கலாட்டா செய்யும் மக்களை இந்த யானைகூட்டங்கள் துரத்தவும் செய்கிறது.