திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பெண்கள் உள்பட 15 பக்தர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
திருநெல்வேலி டவுன் கீழப்புதுத்தெருவை சேர்ந்த வழிபாட்டு குழுவினர் ஒரு வேனில் பக்தி சுற்றுலா சென்று விட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
நெல்லை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது, நெல்லையில் இருந்து மதுரை நோக்கி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் விரைந்து வந்த வேனில் சிக்கி இருந்த உடல்களை மீட்டனர்.
இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பெண்கள் உள்பட 15 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தால் திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.