முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி
, திங்கள், 26 ஜனவரி 2009 (11:04 IST)
முதுகு வலி காரணமாக அவதிப்பட்ட முதல்வர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் கருணாநிதிக்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடும் வலியால் அவதிப்பட்டதாகவும், இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலி அதிகமாக உள்ளதால் குறைந்த ஒரு வார காலத்திற்கு முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், வெளியூர் பயணங்கள், பொது நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலத்தில் முதல்வர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு, அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.