இந்தியாவின் 60வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் ஏதேனும் நடத்தப்படலாம் என்ற அடிப்படையில் பல மடங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகள், திரையரங்கு, பூங்கா, சந்தைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்படுகின்றனர். இதேப்போன்று கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலும் கடுமையான சோதனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் பேசுகையில், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலையும், குடியரசு தினமும் வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாக உள்ளன என்று கூறினார்.