ஜனவரி 26ஆம் தேதி திங்கட்கிழமை இந்தியாவின் 60வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்களாட்சி தத்துவத்திற்கு இலக்கணமாக உலகிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட மாபெரும் குடியரசு நாடாக உயர்ந்து புகழின் உச்சியில் வலுவடைந்துள்ளது இந்தியா. இம்மகத்தான அரசமைப்புச் சாதனைக்கு வித்திட்ட தலைவர்களையும் மத்திய அரசு ஆற்றிவரும் மக்கள் நல சாதனைகளையும் நன்றி யோடு நினைவு கூர்வோம் என்று கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டும், அறவே அகற்றப்பட்டும் உள்ள நிலையில் ஆட்சியை மாற்றியமைக்கும் உரிமை மக்களிடம் தொடர்ந்து இருந்து வருவது இந்தியாவில் தான் என்று நினைக்கின்ற பொழுது நாம் பெருமைப்படலாம். உலகையே மிரட்டி வருகின்ற தீவிரவாதமும், வன்முறைக் கலாச்சாரமும் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பெற்ற சுதந்திரத்தையும், மக்களாட்சியையும் காப்பாற்றும் வகையில் அரசு மட்டுமல்ல மக்களும் விழிப்புணர்வோடு இருக்க கடமைப்பட்டுள்ளோம். வறுமை ஒழிந்து, வேலை வாய்ப்பு பெருகி அனைத்து தர மக்கள் சமவாழ்வு பெற இந்த குடியரசு தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், அரசு நிகழ்ச்சி என்று மட்டும் நின்று விடாமல், மக்கள் அனைவரும் குழுமி ஒற்றுமையிடனும், ஆனந்த பரவசத்துடனும் குடியரசு நன்நாளை கொண்டாட வேண்டும்.
நமது குடியரசு தலைவர் - நமது நாட்டின் நமது தேசிய கொடியை பலத்த பாதுகாப்புக்கிடையே ஏற்ற வேண்டிய சூழ்நிலை மாறி தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை வேரோடு கலைந்தெறியப்பட்டு கொடியேற்றும் சூழலை உருவாக்கிடலே நமது குடியரசுக்கு கொடுக்கும் கவுரவமாக கருத வேண்டும். அதற்கான சூளுரையை இந்த குடியரசு திருநாளில் நாம் அனைவரும் ஏற்போம்.
நாம் மகிழ்ச்சியுடன் குடியரசு தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் அண்டை நாடான இலங்கையில் நம் இந்திய வம்சாவழியினரான தமிழர்கள் சொல்லொனா துயரில் சிக்கி துன்பமுற்றுள்ளார்கள். இந்த வருடம் அவர்களுடைய பிரச்சினைகளை, நமது இந்திய அரசு தலையிட்டு சுமூகமான முறையில் தீர்த்து வைக்க வேண்டும். இந்தியர்கள் அனைவருக்கும், இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.