ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்திய திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், மாணவர்களை உடனடியாக கல்லூரியில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களை பாதுகாக்க உடனே போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் சட்டக்கல்லூரியில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலர் சிவக்குமார், ராஜேஷ்குமார், திலீப்குமார், பிரகலாதன், தியாகராஜன் ஆகிய மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை உடனே கல்லூரியில் சேர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.