மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நாளை உள்ளாட்சித்துறை அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
இது தொடர்பாக வட சென்னை, தென் சென்னை மாவட்ட செயலர்கள் வி.எஸ்.பாபு, ஜெ.அன்பழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக் கையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு வீரமறவர்கள், தமிழ் காத்த தியாக தீபங்கள் தாளமுத்து நடராஜன், டாக்டர் தருமாம்பாள் ஆகியோருக்கு நாளை (25ஆம் தேதி) காலை 8 மணியளவில் சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள நினைவிடத்திலும், 8.30 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள அரங்கநாதன் நினைவிடத்திலும் பொருளாளரும், அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி மற்றும் முன்னணியினர் வீரவணக்கம் செலுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ள அவர்கள், இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.