இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.
அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை தொடங்கிய இந்த மாணவர்கள் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று நடத்திய வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் சாலை மறியலாக மாறியது.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்றக் கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், பல்கலைக்கழக வாயிலுக்கு வந்த மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியபடி, கடற்கரைச் சாலையில் அமர்ந்தனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து இந்திய மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் இரா. திருமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கல்லூரி மாணவர்களுடன், பள்ளி மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் இணைந்து போராடுவது இதுவே முதல் முறை. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அடுத்து மாநிலம் எங்கும் மாணவர்களின் மாபெரும் பேரணி, சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலம், சாலை மறியல், சிறிலங்க தூதரகத்தில் நுழையும் போராட்டம் என போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.