இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரசை தனிமைப்படுத்தி தி.மு.க ஆட்சியை கவிழ்ப்பதற்கு சிலர் சதி செய்கிறார்கள் என்று குற்றம்சாற்றினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் அந்தநாட்டு அரசுக்கும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர். இந்த போர் நிற்காதா? அப்பாவி தமிழர்களுக்கு விடுதலை கிடைக்காதா? என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கிறது.
இது 52 ஆண்டுகால பிரச்சனை. இதில் காங்கிரசை தனிமைப்படுத்தி தி.மு.க ஆட்சியை கவிழ்ப்பதற்கு சிலர் சதி செய்கிறார்கள். இதில் தமிழர் விரோத கட்சியாக காங்கிரசை தனிமைப்படுத்துவதை ஏற்க முடியாது.
தமிழகத்தில் இலங்கை பிரச்சனையை வைத்து சில கட்சிகள் காங்கிரசை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. திருடியவன் திருடன் திருடன் என்று சொல்லி தப்புவது போல சிலர் எதற்கு எடுத்தாலும் காங்கிரசை குறை சொல்லி வருகிறார்கள். விடு தலைப்புலிகள் இலங்கை தமிழர்களுக்கு பாடுபடுவதாக சொல்லிக் கொண்டு முக்கிய தமிழ்த் தலைவர்களை கொன்று குவித்திருக்கிறார்கள். இலங்கை அரசால் ஏற்பட்ட உயிர் இழப்பை விட விடுதலைப்புலிகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் தான் அதிகம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதை மறைத்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுவது சரியல்ல.
இன்னும் எத்தனை நாள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போட்டுக் கொண்டு இருக்க போகிறோம். ஏற்கனவே 2 முறை அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது 3-வது போர் நிறுத்தம். நாம் இங்கிருந்து அனுப்பிய பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்க விடாமல் விடுதலைப்புலிகள் தடுப்பதாக செஞ்சிலுவை சங்கமே கூறி இருக்கிறது. காயமடைந்த 70 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் 3 நாட்கள் தடுத்து வைத்திருப்பதாகவும் செஞ்சிலுவை சங்கம் புகார் கூறி இருக்கிறது. இதையெல்லாம் கேட்க கூடாதா? இலங்கை பிரச்சனைக்கு குரல் கொடுக்க வருபவர்கள் அரசியலை கடந்து மனது சுத்தமாக வாருங்கள். காங்கிரஸ் மார்தட்டி தலைமை ஏற்கும்.
திரிகோண மலையில் அமெரிக்கா ஏவுகணை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டதாக இலங்கை அரசு அதிகாரிகளே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவம் நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை இந்திய ராணுவம் உளவு பார்ப்பதாகவும் வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும் குறை கூறுவது நமது நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி விடும். இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காக இங்கு பேருந்துகளை தீயிட்டு கொளுத்தி நமது தமிழர்களை எரிக்க வேண்டுமா? பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறி கொண்டு நமது தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
திருமாவளவன் உண்ணாவிரதத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். இது தேவையற்றது. காங்கிரசை பலவீனப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது. ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம்தான் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கான நிரந்தர தீர்வாக அமையும்.
விடுதலைப்புலிகள் அதன் அடிப்படையில் ஆயுதங்களைக் கீழேபோட்டு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார்களா என்பதற்கு இங்குள்ளவர்கள் உறுதி அளிக்க வேண்டும். அங்கு வாழும் அப்பாவி தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்க காங்கிரஸ் கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. இன்று முதல்வர் கொண்டு வரும் தீர்மானத்தையும் நாங்கள் ஆதரிப்போம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.