சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், ராணுவம் பற்றி பேசிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும், தமிழகத்தில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்தும், பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்று அவைத் தலைவர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக விவாதிக்க அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் பேசுகையில், இலங்கையில் போர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 5 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். ஆனால் இன்று வரை மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாற்றினார்.
அப்போது காங்கிரஸ் பற்றி உறுப்பினர் சிவபுண்ணியம் ஒரு கருத்தை கூறினார். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த வாசகம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி முயற்சிகளை எடுத்து வருகிறார். தீர்மானமும் கொண்டு வர இருக்கிறார். பிரச்சனையை திசை திருப்பும் வகையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் இதுவரை 2 முறை தீர்மானம் நிறைவேற்றியும், பல போராட்டம் நடத்தியும் மத்திய அரசு போரை நிறுத்த சொல்லி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை கூட செய்யவில்லை என்று உறுப்பினர் சிவபுண்ணியம் கூறிய குற்றச்சாற்றினார். அப்போது இந்திய ராணுவத்துக்கு எதிராக ஒரு கருத்தை கூறினார். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த வாசகம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.