அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-96 அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி இருந்தார். அப்போது கிராம பஞ்சாயத்துகளுக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி வாங்குவதற்காக எல்காட் நிறுவனத்தின் மூலம் டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.82 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, சென்னை எல்காட் நிறுவனத்தின் கிளை மேலாளர் பொம்மைநாயக்கன், ஹைதராபாத்தில் உள்ள எல்காட் நிறுவனத்தின் மூத்த மேலாளர் புருஷோத்தமன் ஆகியேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 120 பி (கூட்டுச்சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 2000ம் ஆண்டு சி.பி.ஐ. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2003-ல் சாட்சிகள் விசாரணை துவங்கி 2009ஆம் ஆண்டுடன் முடிந்தது.
அப்போது, சி.பி.ஐ தரப்பில் 50 சாட்சிகளும், 177 அரசு தரப்பு சான்று ஆவணங்களும், எதிர்தரப்பில் 9 சான்று ஆவணங்களும் சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி கே.நாகநாதன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான குற்றச்சாற்றுகளை சி.பி.ஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்றும், எனவே சந்தேகத்தின் பலனை குற்றம்சாற்றப்பட்டவர்களுக்கு வழங்கி அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக கூறினார்.