இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான இனப் படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் வலியுறுத்தியும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் உச்ச கட்ட போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருகிறது.
இந்தநிலையில் இலங்கை அரசை கண்டிக்கும் வகையில் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீதிமன்ற வளாகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.