திருமங்கலம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாற்றுக்கள் குறித்துக் கேட்டதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர், 'எல்லாம் முடிந்து விட்டது' என்று ஆத்திரப்பட்டார்.
கோவையில் இருந்து இன்று காலை தனது சொந்த விடயமாக சென்னை வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்கள், திருமங்கலம் இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளது பற்றிக் கேட்டனர்.
அதற்கு அவர், "எல்லாம் முடிந்து விட்டது. நான் இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இன்னும் சொல்ல என்ன இருக்கிறது? அங்கு எல்லாம் முடிந்து விட்டது" என்று ஆத்திரப்பட்டுக் கூறினார்.
முன்னதாக, தி.மு.க. தனது வேட்பாளர் லதா அதியமானை வெற்றிபெறச் செய்வதற்காக ஊழலில் ஈடுபட்டதுடன், அரசு இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்தியது என்று ஜெயலலிதா குற்றம்சாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.