கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான நாகை மீனவர்கள் 4 பேரின் சடலம் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகபட்டினத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி கன்னியப்பன், நாச்சியப்பன், சித்ரவேல், சண்முகராஜ் ஆகிய மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து மூழ்கியதாக மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காணாமல் போன 4 மீனவர்களையும் கடந்த 10 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதற்கிடையே தங்கச்சிமடம் கடற்கரையில் நேற்றிரவு ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியதாக கிடைத்த தகவலின் பேரில் தங்கச்சிமடம் காவல்துறை ஆய்வாளர் பாலசிங்கம், உதவி ஆய்வாளர் பரக்கத்துல்லா ஆகியோர் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.
பின்னர் நாகபட்டினம் காவல்துறையத்துக்கு கொடுத்த தகவலைத் தொடர்ந்து அங்கிருந்து வந்த மீனவர்கள், இறந்தவர் நாகை மீனவர் சித்ரவேல் (45) என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை கன்னியப்பன், சண்முகம், நாச்சியப்பன் ஆகிய மீனவர்கள் உடல்களும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மூன்று பேரின் உடல்கள் கடற்கரையில் ஒதுங்கியதை தொடர்ந்து மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.