இந்து ஆதிதிராவிடர்களில் மதம் மாறிப்போனவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று ஆளுநர் உரையில் ஒரு ஆபத்தான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணசேன், இது இந்து ஆதிதிராவிடர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் ஆளுநர் உரையில் ஒரு ஆபத்தான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்து ஆதிதிராவிடர்களில் மதம் மாறிப்போனவர்களையும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பது ஆளுநர் உரையில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கை.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 18 சதவீதம் உயர்த்தப்படாத நிலையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமானால் அது இந்து ஆதிதிராவிடர்களுக்கே பாதிப்பினை உண்டாக்கும். அவர்கள் சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகள் ஆன பின்பும் எதிர்பார்த்த அளவு மேல் நிலை அடையவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு தரப்படும் சலுகையில் மதம் மாறியவர்கள் பங்குக்கு வருவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
மதம் மாறியவர்கள் ஏற்கனவே பின் தங்கிய பிரிவினருக்கான சலுகையை அனுபவித்து வருகிறார்கள். தவிர சிறுபான்மை மதத்தவருக்கான சலுகையும் அனுபவித்து வருகிறார்கள். சிலர் பொய்யாக இந்து என சான்றிதழ் தந்து இருமதத்து சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள். தமிழக அரசின் இந்த கோரிக்கையை இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்க்க வேண்டும் என்று இல.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.