இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 17ஆம் தேதி இலங்கைத் தமிழர்கள் குறித்து தலைமைக் கழகத்தில் நான் அளித்த பேட்டியினை சில தீய சக்திகள் திரித்துக்கூறி, நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருத்தினை தெரிவித்தது போலவும், இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக பேசியது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயலுவதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் அழிவது தவிர்க்க முடியாதது என்றும், பாதுகாப்பான இடங்களுக்கு அப்பாவி இலங்கைத் தமிழர்களை செல்லவிடாமல் அவர்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்துவதால் தான் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தேன். இதிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகவும் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் 'அனைத்துக் கட்சிக் கூட்டம்', 'சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்', 'தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம்', 'மனித சங்கிலி போராட்டம்', 'பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை கருணாநிதியே பெற்றுக் கொள்ளுதல்', 'எல்லோரும் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்', என்ற அறிவிப்பு, 'டெல்லியில் பிரதமருடன் சந்திப்பு', 'வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார்' என்பன போன்ற போலியான தன்னிச்சையான அறிவிப்புகள், 'உண்ணாவிரத போராட்டம்' என பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை கடந்த நான்கு மாதங்களாக கருணாநிதி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் யாருக்கும் எந்தப்பயனும் இதுவரை ஏற்படவில்லை. 'இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லி போரை தீவிரப்படுத்தியது தான் மிச்சம். கருணாநிதியின் இதுபோன்ற செயல்களால் இலங்கை ராணுவத்தால், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை.
இலங்கை தமிழர்கள் பிரச்சனையை பொறுத்தவரையில், சுய நிர்ணய உரிமைக்கென்ற இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை அ.இ.அ.தி.மு.க. முழு மனதோடு ஆதரிக்கிறது. அதே சமயத்தில், ஆயுதம் ஏந்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை எதிர்க்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஜனநாயக வழியில், அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இதற்கு தடையாக இருப்பது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம் தான்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால் தான், அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீ சபாரத்தினம், முகுந்தன் என்கிற உமாமகேஸ்வரன் உட்பட, இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த முன்னணி தமிழின தலைவர்கள் உட்பட ஏராளமான தமிழர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டனர்.
இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? தன்னைத்தவிர, வேறு எந்தத் தமிழினத் தலைவரும் முன்னிலைப்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஒரு சர்வாதிகாரியைப்போல விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் செயல்பட்டு வருவதும், ஜனநாயக ரீதியில் தீர்வு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருவதும் தான் தற்போதைய நிலைமைக்கு காரணம்.
எனவே, இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பை தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் சுதந்திரமாக சிங்கள இன மக்களுக்கு சமமாக வாழ நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தான் அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.