''உயர்ந்த லட்சியங்களின் அடையாள சின்னமாக விளங்கியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'' என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை நினைவு கூறும் விதமாக இன்று முழுவதும் பேரவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
அவைத் தலைவர் ஆவுடையப்பன், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கான இரங்கல் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், சமூகநீதி காவலரும், மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இட ஒதுக்கீட்டை வழங்கி வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற் கொண்டவரும், அரசியல் நாகரீகம், பண்பாடு, உயர்ந்த லட்சியங்களின் அடையாள சின்னமாக விளங்கியவர் வி.பி.சிங்.
தமது 77-வது வயதில் கடந்த 27.11.2008 அன்று இயற்கை எய்தியது குறித்து தமிழக சட்டப்பேரவை அதிர்ச்சியையும், ஆற்றொணாத் துயரையும் அடைகிறது. பொதுவாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவர், 1969ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக பணியாற்றினார்.
1980ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநில முதலமைச்சராகவும், 1983-87 காலத்தில் மீண்டும் மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்தார். 1989ஆம் ஆண்டு இந்தியாவின் 7-வது பிரதமராக பொறுப்பேற்றார்.
தமிழகத்தை பொறுத்தவரை அவர் பிரதமராக இருந்த போது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க காவிரி நடுவர் மன்றம் அமைத்திடக் காரணமாக இருந்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தவுடன், அதனை ஏற்று அந்த மேடையிலேயே அதற்கான அறிவிப்பு செய்தார்.
ராஜ பரம்பரையில் பிறந்து இருந்தாலும், ஏழை எளிய மக்களின் உயர்வுக்காக தனது வாழ்நாள் முழுக்க பாடுபட்டார். அவரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதைத்தொடர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாக அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெகமம் கந்தசாமி, விளவங்கோடு சதாசிவன், கடலாடி பிரணவநாதன், விளாத்திக்குளம் பெருமாள், விருதுநகர் பெ.சீனிவாசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, அவர்களை பிரிந்து வாழும் குடும்பத் தினருக்கு பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை நினைவு கூறும் விதமாக இன்றைய பேரவை நடவடிக்கைகள் முழுவதுமாக ஒத்திவைக்கபட்டது.