அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், ஆரம்ப அங்கீகாரம் பெறுகின்றபோதும், தொடர் அங்கீகாரம் பெறுகின்றபோதும் ஏற்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்துவது குறித்து வழிவகைகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள் துவக்க அங்கீகாரம் பெறுகின்றபோதும், அங்கீகாரம் புதுப்பிக்கின்றபோதும் பள்ளிக் கல்வித்துறை அல்லாத பிற துறைகளிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடம், கட்டிட உரிமம், கட்டிட உறுதிச் சான்று தீயணைப்புத்துறை தடையின்மைச் சான்று மற்றும் சுகாதாரச் சான்று ஆகிய சான்றிதழ்களை பெறுவதில் அதிக கால தாமதம் ஏற்படுகிறது என்றும்,
அதனால் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகிறது என்றும், பொதுத் தேர்விற்கு மாணவர்கள் செல்லுகிறபோது பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாத நிலை உருவாகிறது என்றும் எனவே பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு கோரி பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு முறையீடு அனுப்பி வருகின்றன.
இது குறித்து அரசு ஆழ்ந்து பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் (ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் உட்பட) மற்றும் சுயநிதிப் பள்ளிகள் (மெட்ரிக் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் உட்பட) ஆரம்ப அங்கீகாரம் பெறுகின்றபோதும், தொடர் அங்கீகாரம் பெறுகின்றபோதும் ஏற்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்துவது குறித்து வழிவகைகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி.விஜயகுமார் தலைவராகவும்,
ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வி இயக்குனர் தெ.ஜெகந்நாதன், பள்ளிக் கல்வி இயக்குனர் பெ.பெருமாள்சாமி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் ப.மணி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் இரா.பிச்சை உறுப்பினர் செயலாளராகவும் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.
இக்குழு இது குறித்து ஆழ்ந்து பரிசீலித்து மாணவர் பாதுகாப்பு மற்றும் பள்ளி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.