சிறுதாவூர் பங்களா விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கும், சிறுதாவூர் பங்களா குறித்து விசாரணை செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியத்துக்கும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தங்கும் சிறுதாவூர் பங்களா உரிமையாளர் சித்ராவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஜே.முகோபாத்யாயா, நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட வருவாய்துறை செயலர், சிறுதாவூர் விசாரணை ஆணையம் ஜனவரி 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ராமசாமியும், சிறுதாவூர் விசாரணை ஆணையம் சார்பில் இளங்கோவனும், சித்ரா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனும் ஆஜரானார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுதாவூர் பகுதியில் ஆதி திராவிடர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சிறுதாவூர் பங்களா குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் தலைமையிலான ஆணையம் ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.