தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் சார்பில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய சங்கம் நாளை 'கள்' இறக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளது வருத்தமான விஷயம் என்றார்.
காந்தியடிகளும், பெருந்தலைவர் காமராஜரும், பெரியாரும் முழு மதுவிலக்கை வற்புறுத்தி, அதற்கு ஏற்ப வாழ்ந்தனர் என்று தெரிவித்த தங்கபாலு, இந்த நிலையில் தமிழகத்தில் 'கள்' இறக்குவோம் என்று அறிவித்திருப்பது சரி அல்ல என்றார்.
இதை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் மீண்டும் முழு மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (21ஆம் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு நான் தலைமை தாங்குகிறேன் என்றும் கூறினார்.
உண்ணாவிரதத்தை சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தொடங்கி வைக்கிறார் என்று கூறிய தங்கபாலு, இதேபோல தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது என்றும் சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குவதால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து மற்ற நிர்வாகிகள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.