சொத்து வரி வழக்கை ரத்து செய்யக்கோரி அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
1993-94ம் ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்த வில்லை என்று கூறி அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித்துறை உதவி ஆணையாளர் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 1997ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.
11 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஜெயலலிதா, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த மனுவை நிராகரித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரணை செய்த நீதிபதி மோகன்ராம் இன்று அளித்த தீர்ப்பில், இந்த வழக்கை பொறுத்த வரை புகார் மனு அளித்த போதே அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புகார் மனுவுடன் ஆரம்ப நிலையிலேயே முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. வழக்கை தொடர்வதற்கு புகார் மனுதான் முக்கியம் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
இந்த வழக்கு 11 ஆண்டுகளாக விசாரணை தொடங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே அவரது மனுவை நிராகரிக்கிறேன். மேலும் எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை 5 மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.