தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் தான் பொறுப்பாளி ஆவார்கள் என்று தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்து வரும் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு நடத்தி வருகிற தமிழர் இன அழிப்பு ராணுவத் தாக்குதல்களுக்கு இந்திய அரசு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகிறது. ஆறு லட்சம் தமிழர்கள் முல்லைத் தீவில் உணவின்றி, மருந்தின்றி தவிக்கிறார்கள்.
சிங்கள அரசு ஈவு இரக்கமின்றி அந்த மக்கள் மீது இடைவிடாத விமானத் தாக்குதலும், பீரங்கித் தாக்குதலும் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் "காசா'' பகுதியில் ஆயுதம் ஏந்திப் போராடும் 'காமாஸ்' அமைப்பினர் மீது ராணுவத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் கருத்தினை மதித்து போர் நிறுத்தம் செய்து விட்டது.
ஆனால், இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. கண்துடைப்புக்காகக் கூட பிரணாப் முகர்ஜியை இதுவரை அனுப்ப கூட இல்லை. சிங்கர்மேனன் இலங்கை ராணுவத்தின் தமிழினப் படுகொலைக்கு பாராட்டுத் தெரிவித்து உள்ளார்.
ஈழத் தமிழ் மக்கள் சிங்கள அரசிடம் மடிப்பிச்சை ஏந்தி அடிமைகளாக வாழ்வதை விட மடிவதேமேல் என்று தாங்களாகவே முல்லைத் தீவில் ராணுவத் தாக்குதல்களுக்கு அஞ்சாமல் மரண பூமியில் தவிக்கின்றார்கள். தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் தான் பொறுப்பாளி ஆவார்கள். இந்திய அரசின் துரோகத்திற்கு முழுக்க முழுக்க கருணாநிதி துணையாக இருக்கிறார் என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.
தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் இந்திய அரசையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்து வரும் 28 ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தமிழ்நாடு எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ம.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.