தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உருவ பொம்மையை ராமநாதபுரத்தில் நேற்றிரவு காங்கிரஸ் கட்சியினர் எரிந்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் ராணுவத்தினரை கண்டித்தும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் என்றார். அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.
ராமநாதபுரத்தில் நேற்றிரவு காங்கிரஸ் கட்சியினர் திருமாவளவன் கொடும் பாவியை எரித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.