ஈரோடு அருகே சமையல் எரிவாயு வெடித்து 12 வீடுகள் எரிந்து நாசம்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு அருகே சமையல் எரிவாயு வெடித்ததில் 12 குடிசைவீடுகள் எரிந்து நாசமானது.
ஈரோடு அருகே உள்ளது பள்ளிபாளையம். இது நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்குள்ள ஆவாரங்காடு ஜனதா நகர் பகுதியில் குடிசைவீடுகள் அதிகமாக உள்ளது. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள்.
நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் அர்சுனன் என்பவரது வீட்டில் திடீரென்று தீ பிடித்தது. அப்போது பலமாக காற்று வீசியதால் தீ மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. அருகில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது வீட்டில் தீ பரவி வீட்டிற்குள் இருந்த சமையல் எரிவாயு வெடித்தது.
தகவல் தெரிந்ததும் ஈரோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தில் 12 வீடுகள் எரிந்தது நாசமானது. மேலும் தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் நாசமானது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூவருக்கு தீ காயம் ஏற்பட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.