கொங்கு மண்டலம் அ.இ.அ.தி.மு.க. கோட்டை என நிரூபிப்போம்: செங்கோட்டையன்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
வரும் பாராளுமன்ற தேர்தலில் கொங்குமண்டலம் அ.இ.அ.தி.மு.க.வின் எஃகு கோட்டையென நிரூபிப்போம் என்று முன்னாள் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும் காலத்தில் இருந்து ஏன் அ.இ.அ.தி.மு.க., தொடங்கிய காலத்தில் இருந்து ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்கள் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற்று எஃகு கோட்டையாக வைத்திருந்தது என்றார்.
கடந்த தேர்தலில் தி.மு.க.வினர் தேர்தலில் செய்த தில்லுமுல்லு காரணமாக சற்று சரிவு ஏற்பட்டது என்று தெரிவித்த செங்கோட்டையன், ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற்று கொங்குமண்டலம் அ.இ.அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் என்றார்.
இதுமட்டுமின்றி தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த நாற்பது தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் ஜெயலலிதா யாரை கை நீட்டுகிறார்களோ அவர்தான் அடுத்த பிரதமர் ஆகமுடியும் என்றும் கூறினார்.