மதுரையில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரையில் பி.பி.குளத்தில் எனது வீடு, கட்சி அலுவலகம் உள்ளது. நான் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறேன். அவர்களுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 24.10.2008 அன்று மதுரையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தேசிய கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100 பேர் ஊர்வலமாக வந்து கோஷம் எழுப்பினார்கள். அப்போது என் வீட்டையும் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள். மேலும் அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக 3 சட்டக் கல்லூரி மாணவர்களை மட்டுமே கைது செய்தனர். எனவே இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் விசாரணை சரியாக இருக்காது. எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கே.என்.பாட்சா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் 3 வார காலத்திற்குள் டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி.யின் ஐ.ஜி., தல்லாகுளம் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.