தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் பன்னாட்டு, உள்நாட்டு நிர்வாகங்களின் போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் வரும் 22ஆம் தேதி நடத்தும் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையையும் மறுக்கும் பன்னாட்டு, உள்நாட்டு நிர்வாகங்களின் போக்கை கண்டித்தும், தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை நீக்கம் மற்றும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மீது பழிவாங்குதல்களை எதிர்த்தும் தொழிற்சங்கங்கள் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றன.
பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகள் மீது மாநில அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கூட்டாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜனவரி 22ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், தொழில் மையங்களிலும் மறியல் போராட்டம் நடத்துவதென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த கூட்டுப்போராட்ட நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முழு ஆதரவளிக்கிறது.
தொழிற்சங்க உரிமையை உறுதிப்படுத்துவது, பழிவாங்குதல்களுக்கு முடிவு கட்டுவது உள்பட தொழிற்சங்க அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று வரதராஜன் கூறியுள்ளார்.