இலங்கை அரசின் தமிழின படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து நாளை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் தமிழின படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து இந்த கூட்டமைப்பின் சார்பின் நாளை (21ஆம் தேதி) முதல் தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழினப் படுகொலை நடந்து வருகிறது. அதற்கு இந்திய அரசு உதவி செய்து வருகின்றது. அரசியல் கட்சிள் மட்டும் அல்லாது வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் உண்ணாவிரதம் இருந்து விட்டார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் பிரதமரிடம் முறையிட்டும் தமிழினப் படுகொலை தொடர்கிறது. உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மவுனமும் தொடர்கிறது. அரசியல் கட்சிகள் கை கழுவி விட்டனர். நாம் இன்று வேடிக்கை பார்த்தால் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து உலகின் மிகப்பெரிய கல்லறை இலங்கை அங்கும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்லும்.
ஈழத்தில் 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்து நாளை (21ஆம் தேதி) முதல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.