தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை பிணை வழங்கியது.
இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி தலைவர் மணியரசன் ஆகியோர் விடுதலை பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ஈரோட்டில் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு பேசினோம். இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ஈரோடு வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கூட்டம் நடந்த 5 நாட்களுக்கு பிறகு எங்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியது குற்றமானது என்று கூறி வழக்குப்பதிவு செய்து எங்களை கைது செய்துவிட்டார்கள். கடந்த 20 நாட்களாக நாங்கள் சிறையில் இருந்து வருகிறோம். எங்கள் பிணை மனுவை கடந்த 9ஆம் தேதி ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றமாகாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் கருத்தை மீறி எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் பேச்சால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கூட்டத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் 5 நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு பிணை வழங்க வேண்டும். நாங்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ளவர்கள். எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக இருக்கிறோம் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பேருக்கும் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது.